முன்னாள் காதலியைக் கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படும் இத்தாலிய பல்கலைக்கழக மாணவர் ஒருவரை ஜேர்மானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இத்தாலியின் பதுவா பகுதியை சேர்ந்த 22 வயது Filippo Turetta என்பவரே ஜேர்மனியில் லீப்ஜிக் அருகே அவரது காரில் கண்டுபிடிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக இத்தாலிய அதிகாரிகள் இவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். துரெட்டாவின் முன்னாள் காதலியும் சக மாணவியுமான Giulia Cecchettin என்பவர் கடந்த வார இறுதியில் திடீரென்று மாயமானார்.இந்த நிலையில், சனிக்கிழமை அவரது உடல் பார்சிஸ் ஏரிக்கு அருகில் உள்ள ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டது.இந்த நிலையில் துரெட்டாவும் மாயமாக, கடந்த ஒரு வாரமாக இத்தாலியின் முக்கிய நாளேடுகளில் துரெட்டா தொடர்பான செய்தியே ஆக்கிரமித்திருந்தது. மேலும், கொல்லப்பட்ட பெண் பதுவா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற இருந்தார்.இந்த ஆண்டில் இதுவரை 102 பெண்கள் கணவர் அல்லது துணைவரால் கொல்லப்பட்டுள்ளதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் 82 கொலைகள் குடும்ப உறுப்பினர்களால் அல்லது தற்போதைய அல்லது முன்னாள் துணைவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை பிற்பகுதியில் துரெட்டாவை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளனர். அவரது காரில் பெட்ரோல் தீர்ந்ததால் லீப்ஜிக் அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலையின் அவசரப் பாதையில் தனது வாகனத்தை நிறுத்தியிருந்தார்.இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் துரெட்டா இத்தாலிக்கு அழைத்து வரப்படுவார் என்று இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி கூறியுள்ளார்.