பதில் சொல்லுங்கள் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 கேள்விகள்!
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து பாஜக-வினர் பலரும் திமுக- காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடியிடம் மூன்று முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின். இன்று காலை X தளத்தில் பிரதமர் மோடி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வரும் தகவல்கள் திமுக-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
தமிழக மக்களின் நலனுக்காக திமுக எதுவுமே செய்யவில்லை என்பது இதன் மூலம் புலப்படுகிறது.
காங்கிரசும் சரி, திமுக-வும் சரி தங்களது குடும்பம் முன்னேற வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர்.
கச்சத்தீவு விவகாரத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி வழங்கும் விதமாகவும், மற்ற பாஜக-வினர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் முதல்வர் முக ஸ்டாலின் மூன்று கேள்விகளை கேட்டுள்ளார்.
அதாவது,
“பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே…” எனப் பதிவிட்டுள்ளார்.