பிஞ்சு குழந்தையுடன் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட பெண்.. அதிர்ச்சி சம்பவம்!!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி. இங்கு தெற்கு ராஜ வீதியில் கூலி தொழிலாளி நல்லுசாமி என்பவர் வசித்து வருகிறார். திருமணம் ஆகி இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், 8 வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். நல்லுசாமி மனைவி, குழந்தையுடன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரரும் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். நல்லுசாமி
இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் நல்லுச்சாமியின் மனைவி முத்துலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அருகில் இருந்த தனது எட்டு வயது பெண் குழந்தையையும் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
இதனால் இருவரும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்த போது இருவரும் முற்றிலும் எரிந்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் மரணத்தில் மர்மம் உள்ளதாக முத்துலட்சுமியின் வீட்டார் புகார் கொடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.