வரதட்சணை கேட்டு மருமகள், பேரன் மீது தீ வைத்த மாமனார்… பேரன் பலி – அதிர வைத்த காரணம்!
உத்தமபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அருண்பாண்டியன்(29). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த சிவப்பிரியா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு யாகித்(2) என்ற ஆண்குழந்தை உள்ளது. மகன் காதல் திருமணம் செய்ததால் தனது மருமகளிடமிருந்து வரதட்சணை கிடைக்கவில்லை என்று அருண்பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சிவப்பிரியா இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில நர்சாக வேலை பார்த்து வந்தார். வரதட்சணை கேட்டு மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள் மற்றும் நாத்தனார் கனிமொழி ஆகியோர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
நேற்றிரவு இதுதொடர்பாக மாமனார் பெரியகருப்பனுக்கும், சிவப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் தனது மருமகள் மற்றும் பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகனை தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவப்பிரியாவிடம் தேனி மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தன்மீதும், தனது மகன் மீதும் பெட்ரோல் ஊற்றி மாமனார் எரித்ததாகவும் கூறினார். இதனைதொடர்ந்து ராயப்பன்பட்டி போலீசார் அருண்பாண்டியன் உள்பட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து பெரியகருப்பனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்