விஜய் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாவட்ட செயலாளர்!
தமிழக வெற்றி கழக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்தவர் தற்போது அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து அரசியல் கள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டத்தை புஸ்ஸி ஆனந்த் நடத்தினார்.
அப்போது அவர், விஜய் மக்கள் இயக்கம் எப்படி செயல்பட்டதோ அப்படியே தமிழக வெற்றி கழகமும் செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகி, மாவட்ட செயலாளர்களும் பயப்பட வேண்டாம், உங்களுக்குள் விஜய் இருக்கிறார் என்றும் கூறினார்.
இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் என்பவர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அந்த மாவட்டத்தின் புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமனம் செய்யப்பட்டார். இவர் பில்லா ஜெகன் என்பவரின் சகோதரர் ஆவார்.
பில்லா ஜெகன் என்பவர் கடந்த 2019 -ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சொத்து தகராறில் தனது தம்பியை கொலை செய்ததன் காரணமாக அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சியில் இணைந்துள்ளார்.
முன்னதாக,.நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவிக்கும் போதே அவர் திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போதே அவரது செய்திகள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பில்லா ஜெகன் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.