‘அப்பா மன்னிச்சுடுங்க..,’ அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட இந்திய பெண்ணின் கடைசி வீடியோ!

அமெரிக்காவில் கடந்த எ வருடமாக கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பதற்கு முன் அவர் பதிவிட்டு சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
நியூயார்க்கில், 30 வயதான மந்தீப் கவுர் எனும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், தனது கணவனின் பல ஆண்டுகால துன்புறுத்தலை தாங்கிக்கொள்ளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆறு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகள்களுக்கு தாயான மந்தீப் கவுர், இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோவில், “ஒரு நாள் தனது பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன், எட்டு வருடங்கள் ஆகிவிட்டன; இப்போது என்னால் தினமும் அடிவாங்க முடியாது” என்று அழுது கொண்டே திரும்பத் திரும்ப கூறுகிறார்.
பஞ்சாபியில் பேசிய அவர், தனது கணவர் மற்றும் மாமியார் தன்னை தற்கொலை செய்து கொள்ள “வற்புறுத்தியதாக” குற்றம் சாட்டினார். “அப்பா, நான் சாகப் போகிறேன், தயவுசெய்து என்னை மன்னியுங்கள்” என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 4-ஆம் திகதி அவர் இறந்துவிட்டார் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது தந்தை ஜஸ்பால் சிங், அமெரிக்காவில் இருக்கும் கணவர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அவரது பெற்றோர் மீது உ.பி.யில் உள்ள ஏரியா காவல் நிலையத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளார். “எங்கள் உறவினர்கள் நியூயார்க்கில் உள்ள பொலிஸில் வழக்கு தொடர்ந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
“எங்கள் பேத்திகள் இப்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் இன்னும் தங்கள் தந்தையுடன் இருக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.