இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்களை இந்தியாவிடம் ஒப்படைத்த சுவிஸ் வங்கி!

October 11, 2022 at 8:20 am
pc

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கருப்பு பணத்தை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடங்களாக கருதப்பட்டு வந்தன. அதனால், அந்த வங்கிகளில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள், கணக்கில் காட்டப்படாத பணத்தை போட்டு வைத்திருந்தனர். அவர்கள் வரிஏய்ப்பு செய்வதால், அந்தந்த நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. எனவே, இதற்கு முடிவுகட்ட அந்த வங்கிக்கணக்கு விவரங்களை பெறுவதற்காக, தானாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை சுவிட்சர்லாந்து அரசுடன் செய்து கொண்டன.

இதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டினரின் கணக்கு விவரங்களை அந்தந்த நாட்டிடம் சுவிட்சர்லாந்து பகிர்ந்து கொள்ள தொடங்கியது. ஆனால், இந்தியாவிடம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் இந்தியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள தொடங்கியது. ஆண்டுதோறும் இந்த கணக்கு விவரங்களை அளித்து வருகிறது.

இந்தநிலையில், தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைத்துள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த விவரங்கள் வந்து சேர்ந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. தொழிலதிபர்கள் இந்த 4-வது தொகுப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியோரின் வங்கிக்கணக்கு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சிலர் ஒன்றுக்கு மேல் வைத்திருந்த கணக்குகளின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும், தொழிலதிபர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியேறிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் அரசியல்வாதிகள், முந்தைய அரச குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றில், இந்தியர்களின் பெயர், முகவரி, வங்கியின் பெயர், கணக்கு எண், கணக்கில் நிலுவையில் உள்ள தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இக்கணக்குகளில் மொத்தம் எவ்வளவு தொகை உள்ளது, எத்தனை பேரின் கணக்குகள் கிடைத்துள்ளன போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். ரகசியம் கடைபிடிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறி இருப்பதே அதற்கு காரணம்.

சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை அந்தந்த நபர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் வருமான வரி அதிகாரிகள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். வருமானத்தை மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். வரிஏய்ப்பு, சட்டவிரோத பண பரிமாற்றம், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி போன்ற குற்றங்களை கண்டுபிடிக்க இந்த தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபோல், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியாவுக்கு அடுத்தகட்ட தகவல்களை சுவிட்சர்லாந்து அளிக்கும். இந்தியா மட்டுமின்றி மொத்தம் 101 நாடுகளுடன் சுவிஸ் வங்கிக்கணக்கு தகவல்களை சுவிட்சர்லாந்து பகிர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 34 லட்சம் கணக்குகளின் விவரங்களை அளித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website