கலகத் தலைவன் திரைவிமர்சனம்!

November 21, 2022 at 3:27 pm
pc

நாயகன் உதயநிதி, வஜ்ரா என்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிறுவனத்தின் இரகசியங்கள் எல்லாம் திருடு போவதாக நிறுவனத்தின் உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

இதனால், வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்களை திருடுபவரை கண்டு பிடிக்க ஆரவ் தலைமையிலான குழு களமிறங்குகிறது. இந்தியாவில் உள்ள பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆரவ், தனது படை மூலம் நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை அதிரடியாக விசாரித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் உதயநிதி தான் ரகசியங்களை திருடுகிறார் என்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவர் யார் என்று தெரியாமல் இருக்கிறார். இறுதியில் உதயநிதியை ஆரவ் நெருங்கினாரா? வஜ்ரா கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை உதயநிதி திருட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

படத்தில் நாயகனாக வரும் உதயநிதி, அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் பார்வையாலே நடித்திருக்கிறார். கதாநாயகியை காதலிப்பது, நண்பனுக்காக வருந்துவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கதாநாயகியாக வரும் நிதி அகர்வால், வழக்கமான ஹீரோயின்கள் போல் இல்லாமல், தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். காதலா… லட்சியமா என்று முடிவெடுக்கும் காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறார். 

ஸ்டைலிஷ் வில்லனாக கலக்கியிருக்கிறார் ஆரவ். இவரது மிடுக்கான தோற்றமும், உடல் அமைப்பும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. திரையை நீண்ட நேரம் ஆக்கிரமிப்பு செய்து திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார். 

சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் கலையரசன். கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை, அதனால் பாதிக்கப்படும் மக்கள், பொருளாதாரத்தின் நிலைமை, அரசியல் என படத்தில் பல விஷயங்களை பேசி இருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. 

கதாப்பாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ரயில்வே ஸ்டேஷன் காட்சிகள் விறுவிறுப்பாகவும், வித்தியாசமான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். 

ஶ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அதுபோல் தில்ராஜின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் கழகத் தலைவன் சிறந்தவன்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website