காது வலிக்கு சிகிச்சை பெற்ற பள்ளி மாணவி மரணம்: தவறான சிகிச்சை காரணமா?

February 19, 2023 at 6:48 am
pc

திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மாணவி அபிநயாவுக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அபிநயாவை அவரது தாயார் அழைத்துச் சென்றார். காது வலிக்கு சிகிச்சை ஆஸ்பத்திரியில் டாக்டர் அபிநயாவுக்கு ஸ்கேன் உள்ளிட்ட சோதனை செய்து பார்த்தார்.

இதையடுத்து கடந்த 14-ந் தேதி காலை அபிநயாவுக்கு ஆஸ்பத்திரியில் காதில் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து அரை மணி நேரம் கழித்து அபிநயா தனக்கு நெஞ்சு அதிகமாக வலிப்பதாக தாயிடம் கூறினார். இது குறித்து அபிநயாவின் தாயார் நந்தினி, டாக்டரிடம் தெரிவித்தார். உடனடியாக டாக்டர்கள் ‘எக்கோ’ பார்த்த போது, அபிநயாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கவே ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சையில் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி அபிநயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதை கேட்டு மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் உடலை பார்த்து அவரது தாயார் நந்தினி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி திருவொற்றியூர் போலீஸ் நிலையம் முன்பு அபிநயாவின் தாய், மற்றும் உறவினர்கள், திருநங்கைகளுடன் சாலையின் இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஜான் ஆல்பர்ட், முகம்மது நாசர் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள், தவறான சிகிச்சை அளித்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகிகளை நேரில் வரவழைக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு போலீசார், மாணவியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website