குழந்தைகளை A C அறையில் தூங்கவைக்கலாமா? நல்லதா ..கெட்டதா ?

May 3, 2023 at 10:31 am
pc

இன்று நிலவிவரும் வெப்ப மயமாதல் காரணமாக உலகில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நம்முடையது பொதுவாகவே சூடான பகுதி. சரியான மழை இல்லாததால் மக்கள் வெயில் காலத்தில் மிகப்பெரிய துன்பத்தை அடைகின்றனர். இந்தக் கடும் அனலிலிருந்தும் வியர்வையிருந்தும் தப்பித்துக் கொள்ள அனைவரும் ஏசி-யை நம்பத் தொடங்கி விட்டனர். ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இன்றைய பெற்றோர்கள் பிறந்த பச்சிளம் குழந்தைகளைக் கூட ஏசி அறையில் தூங்கவைக்கத் தொடங்கிவிட்டனர். அவ்வாறு செய்யலாமா? குழந்தையை ஏசியில் வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னவென்று விரிவாக அறியலாம்.

பொதுவாக நாம் ஏசியை உபயோகப்படுத்தும் பொழுது, அதன் வெப்பநிலை 26 முதல் 30 டிகிரி செலசியஸ் அளவு இருப்பது நல்லது. இதற்குக் கீழே குறைக்கும் பொழுது,அறை அளவுக்கு அதிகமான குளிர்ச்சியடையும். இந்த குளிரைக் குழந்தைகளால் தாங்கிக் கொள்ள இயலாது. குழந்தைகளால் தங்களது நிலைமையை வாய்விட்டுச் சொல்லவும் இயலாது. அதனால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.

ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன நன்மைகள்
குழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறி தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் உடனே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது. அந்தவகையில் குளிர்சாதன(ஏசி) அறை குழந்தைகளுக்கு உதவுகின்றது. அதிக வெப்பத்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப ஏசி அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல உறக்கம் கிடைக்கின்றது.

ஏசி அறையில் இருப்பதால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்?
குழந்தை அதிக நேரம் ஏசி அறையில் இருப்பதால், குழந்தையின் உடலும் மனமும் அந்த தட்பவெப்பநிலைக்குப் பழகிப் போய் இருக்கும். திடீரென்று நாம் குழந்தையை வெளி நிகழ்ச்சிகளுக்கு அல்லது வேறு பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல நேரிடுகையில் குழந்தையால் அந்த தட்பவெப்ப நிலையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் குழந்தைக்குத் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

வெப்பத்தால் வியர்வை வரும் போது குழந்தை அழத் தொடங்கும். இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் சிக்கலான விஷயம். அதனால் பெற்றோர்கள் இயன்றவரைக் குழந்தைகளை ஏசிக்கு பழக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது. பாதுவாகவே ஏசி அறையில் அனைத்து ஜன்னல்களும் கதவுகளும் மூடியிருக்கும். வெளிக்காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளே பரவ இயலாது. இதனால் குழந்தை சுவாசித்த காற்றையே சுவாசிக்க நேரிடும். போதிய ஆக்சிஜன் அதில் கிடைக்காமல் போகலாம். இது சரியானது இல்லை. மேலும் மூடிய ஏசி அறையில் சில சமயம் துர்நாற்றம் ஏற்படும். இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகலாம்.

சில குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் சரியான எடை அளவிற்குக் கீழ் பிறந்திருப்பார்கள். இந்த குழந்தைகளை ஏசி அறையில் படுத்து உறங்க வைப்பது நல்லதல்ல. ஏனென்றால் அவர்களின் உடலில் உள்ள உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மையம் போதிய வளர்ச்சியை அடைந்து இருக்காது. ஏசி அறையில் வெப்ப நிலை மிகவும் குறைவாகக் காணப்படும். இதனால் இவர்களின் கை கால் குளிர்ச்சி அடையும். காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இது மாதிரியான சூழலில் உள்ள குழந்தைகளுக்கு ஏசி அறை உகந்ததா என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பரீசிலித்து கொள்வது நல்லது.

பொதுவாகவே காலை நேரத்தில் சூரிய ஒளி அறையில் பரவுவது மிகவும் நல்லது. சூரிய ஒளி குழந்தை உடலில் உயிர்ச்சத்து டி உற்பத்திக்கு மிகவும் உதவுகின்றது. மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க ஏசி அறையில் இருக்கும் பொழுது இந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விடும். ஏசி அறையில் செயற்கையான குளிர்ச்சி கிடைப்பது என்பது உண்மைதான். ஆனால் சில குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்படவும் செய்கின்றது. ஏசி அறையிலிருந்தால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளை அங்கே வைத்திருப்பது உகந்தது அல்ல.

குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்க சில முன்னெச்சரிக்கைகள்
நீங்கள் உங்கள் குழந்தையை ஏசி அறையில் உறங்க வைக்கின்றீர்கள் என்றால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் மறைக்கும் ஆடை
உடல் முழுவதும் பரவிய ஆடையை உங்கள் குழந்தைக்கு அணிவித்து விடுங்கள். கால்களுக்கு சாக்ஸூம் கைகளுக்கு கிளவுஸும் அணிந்து விடுங்கள். அல்லது உங்கள் குழந்தையின் முகத்தைத் தவிர்த்து உடல் முழுவதையும் போர்த்தி விடுங்கள்.

ஏசியை அடிக்கடி சுத்தம் படுத்தவும் மற்றும் பழுது பார்க்கவும்
தொடர்ந்து ஏசியை பயன் படுத்துவதால், அதற்குள் பல தூசிகள் படிந்திருக்கும். அதனால் அவ்வப்போது ஏசியின் மேல் பாகத்தைக் கழட்டி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் தூசி படிந்த ஏசி காற்றின் மூலமாகக் குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு விடும். உடனே சூடான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம். குழந்தையை நீங்கள் ஏசி அறையில் இருந்து எடுத்துச் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். உடனே அதிக வெயில் படும் இடத்திற்காே அல்லது சூடான இடத்திற்கோ எடுத்துச் செல்லக்கூடாது. திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம் குழந்தையின் உடலைப் பாதிக்கும்.

ஜன்னலைத் திறந்து வையுங்கள்
தினம் ஏசி பயன்பாட்டிற்கு முன்னர், குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது அறையில் உள்ள கதவுகள் ஜன்னல்கள் மற்றும் திரைச் சீலைகளை முழுவதுமாக நீக்கி வையுங்கள்.இதனால் பழைய காற்று வெளியேறி புதிய சுத்தமான காற்று அறையின் உள்ளே பரவும். கூடுதலாக போதிய சூரிய வெளிச்சம் அறையில் பரவ சாத்தியம் ஏற்படும். இதனால் அறையில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website