குழந்தையின்மையும்… பெண்கள் மாற்ற வேண்டிய வாழ்க்கை முறையும்!

March 26, 2023 at 9:04 am
pc

குழந்தையின்மைக்கு உடல் நலம், உளநலம், சுற்றுச்சூழல் என பல்வேறு காரணிகள் இருந்தாலும் முக்கியமான காரணம் காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொள்வதுதான். திருமணம் செய்வதற்கு ஏற்ற வயது 22-ல் இருந்து 25 வயது வரையிலான காலகட்டமாகும். அதுதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்தது.

30 வயதுக்குள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் பெண்ணின் கரு முட்டைகளும், ஆணின் உயிரணுக்களும் குழந்தை பேற்றுக்கான தரத்துடனும் வீரியத்துடனும் இருக்கும். அந்த பருவத்தில் திருமணம் செய்தால் தான் இயற்கையான கருத்தரிப்பு சாத்தியப்படும். 

முப்பது வயதுக்கு பின்னர் கருமுட்டை மற்றும் உயிரணுக்களின் வீரியம் குறைந்து கொண்டே வரும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்தை தள்ளிபோடுதல் கூடாது. குழந்தையின்மைக்கு இது மட்டுமே முழு காரணம் அல்ல. 

மரபணு ரீதியான குறைபாடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் என பல காரணங்கள் உள்ளன. இது போன்ற காரணங்களால் இன்றைக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 100 தம்பதிகளில் 2 தம்பதிகளுக்கு மட்டுமே இயல்பான குழந்தை பேறு சாத்தியமுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

எனவே திருமணமாகி ஒரு வருடம் ஆன பின்பும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றால் கணவன்-மனைவி இருவரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்களின் கர்ப்பப் பை, கருமுட்டைப் பை, இவற்றை இணைக்கும் கருக்குழாய் ஆகியன குழந்தைபேற்றுக்கான முக்கிய உறுப்புகளாகும்.

கருமுட்டைப் பையில் உற்பத்தியாகும் முட்டையானது கருக்குழாயை வந்தடையும். அங்குதான் ஆணின் உயிரணு வந்து கருமுட்டையினுள் நுழைந்து கருவுறச் செய்யும். 4-5 நாட்களுக்கு பின்னரே கருவுற்ற முட்டை கர்ப்பப் பைக்குள் சென்று குழந்தையாக வளரத் தொடங்கும். 

இந்த கருமுட்டைப் பை, கருக்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக அமைகின்றன. கர்ப்பப்பை பிரச்சினைகள் 20 சதவீதம் காரணமாக அமைகின்றன.

அதே போல் ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக இருக்கின்றன. அதாவது ஆண்களின் உயிரணுக்கள் வீரியமாக இருந்தால்தான் அது கருமுட்டையை துளைத்துச் சென்று கருவுற செய்ய முடியும்.

வீரியம் குறைந்த உயிரணுக்களால் சாத்தியமில்லை. சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு உயிரணுக்கள் உற்பத்தி இருக்கும், ஆனால் வெளிவராது.

இப்போதெல்லாம் இளைஞர்கள் செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார்கள். அதிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சு ஆண்களின் உயிரணுக்களை பாதிப்பதாக தெரியவந்துள்ளது. இது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது.

மேலும் உடல்சார்ந்த பிரச்சினையில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் மாதவிடாய் சீராய் வருவதில்லை. வந்தாலும் வலி மிகுந்ததாகவே உள்ளது. அது சரியாக இருந்தால் தான் குழந்தைபேறே வாய்க்கும். 

மாதவிடாய் காலத்தில் வெளியேற வேண்டிய ரத்தம் சிலருக்கு உள்ளே சென்று கர்ப்பபைக்கு பின்பகுதியில் திட்டு திட்டாக படிந்து உறைந்து விடும். சில சமயம் இதுபோன்று முட்டைப்பையிலும் படிந்து விடும். 

இப்படிபட்டவர்கள் மாதவிடாயின் போது கடும் வேதனைபடுவார்கள். ஈஸ்ட்ரோஜன் அதிகளவில் சுரந்தாலும் கர்ப்பபையில் கட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே ஹார்மோன்கள் சுரப்பை சமநிலைபடுத்தும் வகையில் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

அதாவது அதிகம் உணர்ச்சி வசப்படாமலும் பதட்டம் அடையாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் சமயத்தில் வைக்கும் நாப்கினை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதுதான் கிருமித் தொற்று பரவாமல் தடுக்கும்.

தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். சிலருக்கு தலைக்கு ஊற்றுவது ஆகாது என்றால் வாரத்தில் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு பெண்கள் தங்கள் வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற வகையில் உடல் எடையை வைத்திருப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

எண்ணெயில் பொரித்த நொறுக்குத்தீனிகள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகள் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் எடை அதிகமான பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது சிலருக்கு நீரழிவு நோய் ஏற்படலாம். அது வயிற்றில் வளரும் குழந்தையையும் தொற்றலாம்.

அதனால் சுகபிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு குழந்தை பேற்றுக்கு பின்னர் நீரழிவு வரலாம். எனவே உடல் எடையை நார்மலாக வைத்திருப்பதே நல்லது. மேலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கரு முட்டை பையில் நீர்கட்டிகள் உருவாக 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன. 

ஒல்லியானவர்களுக்கு 10 சதவீத வாய்ப்புதான் உள்ளது. இந்த நீர்க்கட்டிகள் உருவாகுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உண்டு. எனவே பெண்கள் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றோடு மனநலமும் முக்கியம். மகிழ்ச்சியான விசயங்களில் மனதை திருப்ப வேண்டும். 

டென்ஷன் படுவதை தவிர்க்க வேண்டும். இரவு தூக்கத்தை தவிர்க்க கூடாது. தூக்கம் கெட்டால் உடலின் இயக்கம் பாதிக்கும். உடல் சூடாகும். அதுவே பல்வேறு நோய்களை வரவழைக்கும். எனவே பகலில் உழைப்பும் இரவில் ஓய்வும் தேவை. இயற்கையான வாழ்வியலை கடைப்பிடிக்க வேண்டும்.

ரசாயன நச்சு இல்லாமல் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. சுகாதாரமான காற்றை சுவாசிப்பது கூடுதல் ஆரோக்கியம். 

அன்றாடம் உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி அவசியம். இப்படியான சூழலில் காலா காலத்தில் திருமணம் செய்து இல்லற வாழ்வை இனிமையாக தொடங்கினால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website