செந்தில் பாலாஜி கைது: தலைமைச்செயலகத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து!

June 15, 2023 at 9:21 am
pc

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக முக்கிய துறைகளின் செயலாளர்கள் நேற்று முன்தினமே தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி நாமக்கல் கவிஞர் மாளிகை தயாராக இருந்தது.

ஆனால் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனை, அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் கைதை அடுத்து அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நேற்று காலை 10.15 மணிக்கு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை பார்த்து நலம் விசாரித்தார்.

அங்கிருந்து நேராக 10.35 மணிக்கு தலைமைச்செயலகம் வந்தார். அவரது காரில் மூத்த நிர்வாகிகளான அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோரும் உடன் வந்தனர். தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ரகுபதி ஆகியோரும் வருகை தந்தனர். தன்னுடைய அறைக்குச் சென்ற முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் உள்துறைச் செயலாளர் அமுதா, முதல்-அமைச்சரின் செயலாளர் முருகானந்தம், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் பங்கேற்றனர். பகல் 11.15 மணிக்கு தலைமைச்செயலகத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் நேராக தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்றார்.

முதல்-அமைச்சரின் அடுத்தடுத்த நிகழ்வுகளால், தலைமைச்செயலகத்தில் நேற்று நடப்பதாக இருந்த அனைத்து ஆய்வுக்கூட்டங்களும், நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. வழக்கத்துக்கு மாறாக தலைமைச்செயலகம் விடுமுறை நாள் போல வெறிச்சோடிக் காணப்பட்டது. பார்வையாளர்களும் எவரும் வரவில்லை. அலுவலர்கள் நடமாட்டமும் இல்லை. மொத்தத்தில் தலைமைச்செயலகம் நேற்று அமைதியில் ஆழ்ந்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website