தாயிடம் கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்: சொன்ன அதிர்ச்சி காரணம்!

July 7, 2023 at 5:37 pm
pc

தமிழகத்தின் கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ராணுவ வீரர் தாயுடன் செல்போனில் பேசும் போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்பவரது மகன் மணித்துரை, 2015 ஆம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிய மணித்துரை, கடந்த 1 ஆம் தேதி தன் பணியின் போது துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உதயசுருதி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்ச கணக்கில் பணத்தை இழந்த மணித்துரை தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி செய்தி வெளியானது.

மணித்துரை தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கீழக்கரந்தையில் இருக்கக்கூடிய தனது தாய் கனக வேலம்மாளை செல்போனில் அழைத்து, தான் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததாகவும், பலரிடம் கடன் வாங்கியுள்ளதாகவும், ஊருக்கு வரவே விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘இனி வாழ விரும்பவில்லை, 2 முறை துப்பாக்கி சத்தம் கேட்டதும் தான் இறந்து விட்டதாக நினைத்துக் கொள், அதுவரை பேசு அம்மா’ எனக் கூறியுள்ளார். பின்பு, துப்பாக்கி சத்தம் கேட்டதும் தாய் கனக வேலம்மாள் கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. மணித்துரை கடந்த 1 ஆம் தேதி ஊருக்கு வரவிருந்த நிலையில், அவருடைய உடல் மட்டுமே வந்துள்ளது என உறவினர்கள் கதறி அழுதனர்.

மணித்துரையின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மகனும் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website