நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி!

உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திடீரென நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 1973ம் ஆண்டு தெலுங்கு சினிமாத்துறையில் நடிகராக அறிமுகமானார்.
அதன் பிறகு, கே. பாலசந்தர் இயக்கத்தில் ‘நிழல் நிஜமாகிறது’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
1974ம் ஆண்டு நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்துக் கொண்டார் சரத்பாபு. ஆனால், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1988ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இதன் பிறகு, நடிகர் நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை 1990ம் ஆண்டு திருமணம் செய்தார். அவரையும் 2011ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் தன் வீட்டில் இருந்த நடிகர் சரத்பாபு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.