நடிகை நிவேதா பெத்துராஜிடம் வழிப்பறி.. சென்னை அடையாறு சிக்னலில் ஏமாற்றிய 8 வயது சிறுவன்!

சென்னை அடையாறு சிக்னலில் புத்தகம் விற்பனை செய்வது போல் நடிகை நிவேதா பெத்துராஜை ஏமாற்றி அவரது கையில் இருந்த பணத்தை 8 வயது சிறுவன் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் அட்டை கத்தி தினேசுடன் ‛ஒருநாள் கூத்து’, நடிகரும் தற்போதைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுடன் ‛பொதுவாக எம்மனசு தங்கம்’, பிரபுதேவாவுடன் ‛பொன் மாணிக்கவேல்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் தெலுங்கு திரைப்படங்களிலும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் மதுரையை சேர்ந்தவர். .தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
தீபாவளியையொட்டி நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். நீல நிற புடவை அணிந்து தலை நிறைய மல்லிப்பூவுடன் கம்பி மத்தாப்பு மூலம் புஷ்வான வெடியை வெடிக்க வைத்து நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தான் தற்போது நிவேதா பெத்துராஜிடம் வழிப்பறி நடந்துள்ளது. நிவேதா பெத்துராஜ் சென்னை அடையாறு சிக்னலில் நின்றபோது அவரின் கையில் இருந்த பணத்தை 8 வயது சிறுவன் பறித்து சென்றுள்ளான். இதுதொடர்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சம்பவம் பற்றி நிவேதா பெத்துராஜ் ஸ்டோரி போட்டுள்ளார்.
அதில் நிவேதா பெத்துராஜ், ‛‛அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். இலவசமாக பணம் கொடுக்க நான் மறுத்தேன். இதையடுத்து அவன் புத்தகத்தை ரூ.50க்கு என்னிடம் விற்பனை செய்ய முயன்றான். நான் ரூ.100யை எடுத்தேன். இந்த வேளையில் சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். அப்படியே ரூ.500 தாங்கனு கேட்டான். அப்போது நான் புத்தகத்தை அவனிடம் கொடுத்து ரூ.100யை மீண்டும் வாங்கினேன். இந்த வேளையில் புத்தகத்தை காருக்குள் வீசிய சிறுவன் என் கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்” என கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் நிவேதா பெத்துராஜ்,‛‛ இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருப்பது உண்மையா? இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்து உள்ளீர்களா?” எனவும் கேள்வி எழுப்பி Yes, No என்ற ஆப்ஷனையும் வழங்கி உள்ளார்.