‘நான் என்றுமே அலறவில்லை’ முரசொலி செய்திக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி!

September 13, 2022 at 10:39 am
pc

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே 23 அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன சிவன் சிலையை தரிசனம் செய்ய சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். நிரந்தரமாக தமிழக அரசியல் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போது ஆளுநராக உள்ளேன். வருங்காலத்தில் எனக்கு என்ன பணி இறைவன் வைத்துள்ளான் என்று தெரியவில்லை, அன்றைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். தற்போது என்னுடைய ஆளுநர் பணியை தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் செய்து வருகிறேன். அவ்வப்போது தமிழகத்திற்கு சகோதரியாக வந்து செல்கிறேன்.

தெலுங்கானா அரசு உங்களை புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டி முரசொலியில் செய்தி வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு, நான் அதை பற்றி கவலைப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சி பத்திரிகை அவமதிக்கப்பட்டார் என்று எழுதியுள்ளது. நான் என்றுமே அவமதிக்கப்படவுமில்லை, அலறவுமில்லை.

எதைப் பார்த்தும் அலற மாட்டேன் புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள். மூன்றாண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். அதில் 6 மாவட்ட பழங்குடியின மக்களை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்க கோழியின் முட்டைகள் வழங்கி ஊட்டச்சத்தை மேம்படுத்தி இருக்கிறேன்.

மருத்துவமனை ,கல்லூரிகள், விடுதிகளுக்கு ஆய்வுக்கு செல்கிறேன். மக்களை,குறிப்பாக மகளிரை சந்திக்கிறேன். இப்படி நல்லது செய்து வருகிற போது ஆளுநர் இப்படியும் அவமதிக்கப்படுகிறார் என்று சொன்னேனே தவிர நான் அலறவோ, அழுகவோ கிடையாது. என்னை மதித்தாலும், மதிக்காவிட்டாலும் என் பணி தொடரும்.அங்கு அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று இங்கு மகிழும் கூட்டம் இருக்கிறதே என்பது தான் ஆச்சரியம்.

புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்த மூன்று துணை வேந்தர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தெலுங்கானாவில் புதிய கல்வி கொள்ளை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை பல லட்சம் ஆசிரியர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம்.

இதே மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களும் புதியக் கல்விக் கொள்கைக்கு கருத்து சொல்லி இருக்கிறார்கள். பெற்றோர்களும் கருத்துக்களை சொல்லியுள்ளனர். புதிய கல்விக் கொள்கையை பற்றி முழுவதுமாக தமிழக அரசு தெரிந்துகொண்டால் அதனை ஏற்றுக் கொள்வார்கள்” இவ்வாறு கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website