புரூஸ் லீ மரணம் தொடர்பில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்!

November 22, 2022 at 8:46 pm
pc

தற்காப்பு கலையின் நாயகன் புரூஸ் லீயின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர். குங்ஃபூ தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய புரூஸ் லீ, 1973ஆம் ஆண்டு தனது 32வது வயதில் அகால மரணமடைந்தது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது புரூஸ் லீயின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. சீன கேங்ஸ்டர்களினால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒருபுறமும், பொறாமை கொண்ட அவரது காதலி விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று மறுபுறமும் என பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால் அவரது மரணத்திற்கான உண்மை காரணம் தெரிய வரவில்லை.

இந்த நிலையில் Hyponatremia-வினால் புரூஸ் லீ இறந்திருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார். அதாவது, சிறுநீரகத்தின் அதிகப்படியான நீரை வெளியேற்ற இயலாமை காரணமாக புருஸ் லீ உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் குழு The Clinical Kidney Journal-யில் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘அதிகப்படியான நீர் உட்கொள்ளல் சிறுநீரில் நீர் வெளியேற்றத்துடன் பொருந்தவில்லை என்றால் Hyponatremia ஏற்படும். இதன்மூலம் பெருமூளை வீக்கம் ஏற்பட்டு, சில மணிநேரங்களில் மரணத்திற்கு வழி வகுக்கும். லீயின் விடயத்தில் அப்படி தான் நிகழ்ந்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

மேத்யூ பாலி எழுதிய புரூஸ் லீயின் சுயசரிதை புத்தகத்தில், அவர் இறந்த நாளில் தண்ணீரை அடிக்கடி குடித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கஞ்சா பயன்பாடு தாகத்தை அதிகரிக்கும், எனவே புரூஸ் லீ அதனை பயன்படுத்தியிருக்கும் பட்சத்தில், அதிகப்படியான தண்ணீரைக் குடிக்க தூண்டியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் புரூஸ் லீயின் மரணம் குறித்த 49 ஆண்டுகால மர்மம் விலகிவிட்டதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website