மகிந்தவின் பிறந்த தினத்தில் நாமலுக்கு தலைமைப் பொறுப்பு?

November 6, 2023 at 7:41 pm
pc

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது பிறந்த தினமான எதிர்வரும் 18 ஆம் திகதி கட்சியின் முக்கிய பொறுப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக நாமல் ராஜபக்ஷவின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திய மஹிந்த ராஜபக்ஷ வெறுமனே வரவு – செலவு திட்டத்தை விமர்சிக்காது மக்கள் மத்தியில் சென்று உண்மைகளை கண்டறியுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 7 ஆவது சம்மேளனம் கடந்த கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மத வழிபாடுகளுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ பஷில் ராஜபக்ஷ ஆகியோர் இணைந்திருந்தனர். அதே போன்று பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றினர்.அடுத்த வருடம் உத்தேசிக்கப்படுகின்ற தேசிய தேர்தல்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றது. ஆனால் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படுமாயின் ராஜபக்ஷ ஒருவரை களமிறக்குவது சாத்தியமில்லை என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயமாகும். எனவே தான் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் உயர் பீடம் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு வலியுறுத்தி வருகின்றது.இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் – பொருளாதார கொந்தளிப்புகளின் பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தினர் தேசிய அரசியலில் நீண்டகாலமாக அமைதியை பின்பற்றியிருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறுகிய கால இடைவெளிக்கு பின்னர் கட்சியை மீண்டும் ஒருங்கிணைத்தும் ஆதரவாளர்களை சந்தித்தும் இருந்தார். மஹிந்த ராஜபக்ஷவை பொறுத்த வரையில் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து அண்மைய காலமாக கூடுதல் அவதானத்தை செலுத்துவதை காண கூடியதாக உள்ளது.13 ஆம் திகதி ஜனாதிபதி முன்வைக்கவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பில் கடந்த வாரத்தில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த கலந்துரையாடலின் பின்னர் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவை புதன் கிழமை சந்தித்தனர்.வரவு – செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் இல்லா விடின் ஆதரவளிக்க போவதில்லை என்பதே எமது நிலைப்பாடு என்ற விடயத்தை மஹிந்த ராஜபக்ஷவிடம் இதன் போது தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சுயாதீனமாக தீர்மானங்கள் எடுப்பது சிறந்தது. ஆனால் ஆழமாக சிந்திக்காது செயல்பட வேண்டாம் என்ற விடயத்தை மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார்.இதன் பிரகாரம் இவ்வாரத்தில் நெலும் மாவத்தை கட்சி தலைமையகத்தில் பல்வேறு சந்திப்புகள் இடம்பெறவுள்ளது. அதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீண்டும் மக்கள் மத்தியில் நேரடியாக கொண்டு செல்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது பிறந்த தினம் ஆகையால், அதன் பின்னர் பொதுஜன பெரமுனவில் முக்கிய பொறுப்புகள் கைமாற்றப்படலாம். இதன் போது நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய பொறுப்புக்கள் கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website