மக்கள் சிரித்தால் மரண தண்டனை?; அதிபர் திடீர் உத்தரவு!

December 22, 2022 at 6:55 am
pc

உலகில் ஒரு மர்ம தேசம் இருக்கிறது என்றால் அது ‘வடகொரியா’ என்பது தான் பலரது பதிலாக இருக்கும். ஆம். வடகொரியா எனும் இந்த மர்ம தேசத்தில் நாம் நினைத்து கூட, பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கும். 

இந்த நாட்டின் அதிபரான ‘கிங் ஜாங் உன்’ சற்று அல்லது ரொம்பவே வித்தியாசமான பேர் வழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, ‘நாட்டில் உணவு பஞ்சம். மக்கள் அளவோடு உணவு உண்ண வேண்டும்’ என அதிபரிடம் இருந்து கட்டளை வந்தது.

அதிபரிடம் இருந்து வரும் உத்தரவுகள் அனைத்துமே கட்டளைகள் தான். அதிபர் ஏறக்குறைய கடவுள் மாதிரி. அவரை எதிர்க்க வடகொரியாவில் யாருமே இன்னும் பிறக்கவில்லை. 

பிறந்தாலும் அவர் உயிரோடு இருப்பாரா? என்று, யாராலும் சொல்லவே முடியாது. அதை பின்பற்ற வேண்டியது மக்கள் தலைவிதி. உணவுக்கு அளவா? என, கேட்டு யாருமே மூச்சு வாங்க வேண்டாம். 

இவை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தற்போது ஒரு முக்கிய உத்தரவை வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன் பிறப்பித்துள்ளார். ஆம் நாட்டு மக்கள் யாரும் 11 நாள்களுக்கு சிரிக்க கூடாது என்பது தான் அந்த முக்கிய உத்தரவு. 

கடந்த 2011ம் ஆண்டு மறைந்த வட கொரிய முன்னாள் அதிபரும், கிம் ஜாங் உன் தந்தையுமான ஜிம் ஜொங் இல் இறந்தார். அந்த ஆண்டு முதல் ஒவ்வொரு நினைவு தினத்தன்றும் நினைவு நாள் துக்க காலமாக அனுசரிக்கப்படுகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டு கிம் ஜாங் இல் 11வது நினைவு தினமானது கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு 11 நாட்களுக்கு வடகொரியா நாட்டில் துக்க காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நாட்டின் மக்கள் யாரும் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும், துக்க காலத்தில் வடகொரிய நாட்டு மக்கள் பொதுபோக்கு கொண்டாட்டங்களில் ஈடுபடவும், கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதை எல்லாம் மக்கள் கடைப்பிடிப்பார்களா? சிரிக்காமல் எப்படி இருப்பார்கள்? என்பது தான் நம்மைப் போன்றவர்களின் கேள்வியாக இருக்கும். ஆனால், அங்கு வீட்டுக்கு வீடு ராணுவ வீரர்கள் மற்றும் அரசு உளவாளிகள் இருப்பார்கள். 

இந்த துக்க காலத்தில் குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழ கூடாது. மாறாக மெதுவாகவே அழ வேண்டும். இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்து இருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று வடகொரியா நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டி இருக்கின்றன. 

மேலும் துக்க காலம் முடிந்த பிறகுதான் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். அதுவரையில் இறந்தவரின் உடலை வீட்டிலேயே பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. 

கடந்த காலங்களில் துக்கக் காலத்தில் மது குடித்து விட்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட சிலரை வடகொரியா போலீஸ் கைது செய்துள்ளது. அதன் பிறகு அவர்களை யாருமே பார்க்க முடியவில்லை என்ற பகீர் தகவலும் வடகொரியாவில் நிழலாடுகிறது.



Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website