மாமன்னன் திரைவிமர்சனம்!

June 30, 2023 at 12:00 pm
pc

ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க சாதியினர் தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே மாமன்னன். 

சேலம் மாவட்டம் காசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் வடிவேலு. இவரது மகன் உதயநிதி அடிமுறை பயிற்சி நடத்திக் கொண்டு பன்றி வளர்த்து வருகிறார். இவருடன் கல்லூரியில் படித்த கீர்த்தி சுரேஷ், இலவசமாக பயிற்சி பள்ளி ஒன்றை உதயநிதி இடத்தில் நடத்தி வருகிறார். 

இந்த இலவச பயிற்சி பள்ளியால் மாவட்ட செயலாளராக இருக்கும் பகத் பாசிலின் அண்ணனுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதனால் ஆட்களை வைத்து பயிற்சி பள்ளி நடத்தி வரும் இடத்தை அடித்து நொறுக்குகிறார். கோபமடையும் உதயநிதி, பகத் பாசில் அண்ணன் இடத்திற்கு சென்று அடித்து துவம்சம் செய்கிறார். 

இந்த பிரச்சனை பகத் பாசில் மற்றும் வடிவேலு கவனத்திற்கு செல்கிறது. பகத் பாசில் பேசி பிரச்சினையை முடிக்க வடிவேலு மற்றும் உதயநிதியை அழைக்கிறார். 

அங்கு வடிவேலுவை பகத் பாசில் தரக்குறைவாக நடத்த, அவரை உதயநிதி அடித்து விடுகிறார். இது அரசியல் பிரச்சினையாக மாற, பகத் பாசில், வடிவேலு மற்றும் உதயநிதியை கொல்ல திட்டம் போடுகிறார். இறுதியில் பகத் பாசில், வடிவேலு மற்றும் உதயநிதியை கொன்றாரா? இந்த பிரச்சினையில் இருந்து உதயநிதி எப்படி மீண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உதயநிதி, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் தந்தைக்கு அவமானம் ஏற்படும் போதும், வில்லன்களை அடிக்கும் போதும் ஆக்ரோஷமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகியாக வரும் கீர்த்தி சுரேஷ், நாயகனுக்கு பக்கபலமாக படம் முழுக்க பயணித்து இருக்கிறார். 

ஒரு சில இடங்களில் கவனிக்க வைத்து இருக்கிறார். வில்லனாக மிரட்டி இருக்கிறார் பகத் பாசில். அவருக்கே உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

முழு கதையையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார் வடிவேலு. மலை மீது நின்று அழும்போது கண்கலங்க வைக்கிறார். மகனிடம் வாள் கொடுத்து உட்கார வைக்கும் போது அசர வைத்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எழுந்து நிற்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 

தனக்கே உரிய பாணியில் அரசியல் கலந்து இப்படத்தை கொடுத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க சாதியினர் தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார். 

ஏ. ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு பெரிய பலம். பல இடங்களில் இவரது பின்னணி இசை திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் மாமன்னன் – மக்களின் மன்னன்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website