“ராகுல் காந்தியே வருக… புதிய இந்தியாவை தருக…” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

April 13, 2024 at 9:11 am
pc

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். 

வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், ‘ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக’ என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது” என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website