வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில் நவம்பர் 26 -ம் திகதி அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளளது.
இந்த சுழற்சி நவம்பர் 23 -ம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். பின்னர், அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால், நவம்பர் 26 -ம் திகதி அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதன் காரணமாக இன்று (நவம்பர் 22) முதல் நவம்பர் 24 வரை தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், 25-ம் திகதி முதல் 28 -ம் திகதி வரை டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.