வனத்துறையிடம் வசமாய் சிக்கிய நடிகர் ரோபோ சங்கர்!

February 15, 2023 at 9:04 pm
pc

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில் இன்று கிண்டி வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி அவர் வளர்த்து வந்த 2 கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ரோபா சங்கரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் அவருக்கு பெரும்தொகை அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் ஜொலித்தவர் ரோபோ சங்கர். நகைச்சுவை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை ரோபோ சங்கர் பெற்றார். அதன்பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்றார்.

தற்போது பல திரைப்படங்களில் ரோபோ சங்கர் நடித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலி கிராமத்தில் வசித்து வருகிறார். நடிப்புக்கு அப்பாற்பட்டு ரோபோ சங்கர் ர் சமூக வலைதளம் மற்றும் யூடியூப்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ரோபா சங்கர் கிளி உள்ளிட்ட செல்ல பிராணிகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் தான் சென்னை கிண்டி வனத்துறை அதிகாரிகள் இன்று சாலிகிராமத்தில் உள்ள ரோபோ சங்கரின் வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவர் அனுமதியின்றி கிளிகள் வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து ரோபோ சங்கர் வளர்த்து வந்த 2 கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்., ரோபோ சங்கர் ‘அலெக்சாண்ட்ரின்’ கிளிகளை அனுமதியின்றி வளர்த்த நிலையில் அதனை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்திய வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு விலங்குகள், பறவைகள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள விலங்குகள், பறவைகளை வீட்டில் வளர்க்க உரிய அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். மாறாக அனுமதியின்றி வளர்த்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும் இந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள், பறவைகள் பற்றிய புரிதல் இன்றி பலரும் கூட பறவைகளை வளர்க்கின்றனர். குறிப்பாக சாதாரண பச்சை கிளி உள்பட ஏராளமான கிளி வகைகள் மக்கள் வளர்த்து வருகின்றனர்.

தற்போது ரோபோ சங்கரும் எந்தவித அனுமதியின்றியும் வீட்டில் ‘அலெக்சாண்ட்ரின்’ கிளியை வளர்த்ததால் தான் வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட இந்த 2 கிளிகளையும் வனத்துறையினர் கிண்டி தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் ரோபோ சங்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் நடக்கலாம் என கூறப்படுகிறது. அப்போது ரோபோ சங்கர் ஏதேனும் விதிகளை மீறியிருந்தால் அவருக்க சுமார் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது ஒருபுறம் இருக்க ரோபோ சங்கர் எப்படி சிக்கினார் என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் ரோபோ சங்கர் தான் வளர்க்கும் கிளிகளுடன் யூடியூப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்ட நிலையில் அதனை பார்த்தவர்கள் தான் வனத்துறைக்கு புகார் அளித்ததாகவும், அதனடிப்படையில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website