வாழை அற்புதமான படைப்பு.. படத்திலிருந்து மீளமுடியவில்லை… தழுதழுத்த குரலில் பேசிய விஜய்சேதுபதி!

மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் வாழை, சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் படம் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி, படம் முடிந்த பிறகும் அதன் தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை என தழுதழுத்த குரலில் பேசி உள்ளார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில், குழந்தை நட்சத்திரமாக பொன்வேல், ராகுல் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் மற்ற கதாபாத்திரத்தில் கலையரசன், நிகிலா விமல், ஜெய் சதீஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரையுலகின் பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் ‘வாழை’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து மாரி செல்வராஜை கட்டித்தழுவி பாராட்டி நெகிழ்ந்தனர். குறிப்பாக இயக்குநர் பாலா வாழை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து விட்டு கலங்கிய கண்ணோடு, மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.
வாழை: வாழை படத்திற்கு பிரபலங்களிடம் இருந்து கிடைத்து வரும் வரவேற்பால், பொது மக்களும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். மாரி செல்வராஜின் வாழை காண்போரின் நெஞ்சங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திரைக்கதை முதல் படத்தில் நடித்துள்ள காதாபாத்திரங்கள் வரை ஒட்டுமொத்த படமும் மக்களின் உச்சகட்ட ஆதரவை பெற்று வருகிறது.
விஜய்சேதுபதி: இந்த நிலையில், வாழை படத்தை பார்த்த, விஜய்சேதுபதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் பார்த்தேன், ஒரு அற்புதமான படம் இன்னும் அந்த படம் முடிந்த மாதிரியே தெரியவில்லை. இன்னும் நான் அந்த படத்திற்குள்ளேயே இருக்கிறேன். அந்த படத்தில் அவர் பேசிய அரசியல், வசனம், நடித்தவர்கள், இந்த ஊரில் இருக்கும் ஒருவனாக நான் அதில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன். இதுபோன்ற படம் எடுத்த மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி,
அற்புதமான படைப்பு: இதுபோன்ற செய்திகளை செய்திகளில் கேட்கும் போதும், செய்தி தாள்களில் பார்க்கும் போதும் சாதாரணமாக கடந்து போய் இருப்போம். இதற்கு பின்னாடி இருக்கும் வாழ்க்கையை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக புதிய வைத்து இருக்கிறார் மாரி செல்வராஜ் அதற்கு நன்றி. படத்தை தியேட்டரில் வந்து பாருங்க, ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும், நம்ம வாழ்க்கை மேலே சில கேள்விகள் கேட்போம் என்று நடிகர் விஜய் சேதுபதி, தழு தழுத்த குரலில் படம் குறித்து பிரம்மித்து பாராட்டி பேசினார்.