வாழை படம் பார்த்த திருமாவளவன்.. மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டு!

August 26, 2024 at 11:01 am
pc

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வாழை. இந்தப் படம் தனது மனதில் சிறு வயதில் இருந்தே இருக்கும் மிகப்பெரிய கண்ணீர் என வாழை படத்தின் புரோமோஷன்களில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். வாழை படம் பார்த்த இயக்குநர்கள் தொடங்கி பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், இயக்குநர் மாரி செல்வராஜ் வீட்டிற்கே சென்று பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் இதுவரை நான்கு படங்கள் வெளியாகியுள்ளது. இதில் வாழை நான்காவது படம். வாழை படத்தை எடுக்கத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என மாரி செல்வராஜ் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் கூறியுள்ளார்.

வாழை படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். தனது பால்யத்தில் நடைபெற்ற விபத்தில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த 20 பேர் விபத்தில் பலியானதை திரைப்படமாக எடுத்து, தான் கடந்து வந்த பாதையையும், அதன் வலியையும் ரசிகர்களுக்கு உணர வைத்துள்ளார். வழக்கமாக ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி முடிந்து, எண்ட் டைட்டில் கார்டு போடும்போது எதாவது பாடல் இடம்பெற்றாலுமே கூட ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேறுவார்கள். ஆனால், வாழை படத்தினைப் பார்த்தவர்கள் தங்களது இருக்கையில் இருந்து அசையாமல், திரை முழுவதும் வெள்ளையாகும் வரை காத்திருந்தனர். இதுவே மாரி செல்வராஜ்க்கு கிடைத்த மாபெரும் வெற்றிதான்.

முத்தமும் கண்ணீரும்: ஏற்கனவே படம் பார்த்த இயக்குநர் பாலா, நடிகர் சூரி மாரி செல்வராஜ்க்கு முத்தங்களைக் கொடுத்து பாராட்டினர். நடிகர் தங்கதுரை உள்ளிட்டோர் மிகவும் மனமுடைந்து அழுதுகொண்டே மாரி செல்வராஜை இறுகப் பற்றிக்கொண்டனர். படம் பார்த்த இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் மாரி செல்வராஜை மனம் திறந்து பாராட்டினார். அதேபோல், இயக்குநர் மணி ரத்னம், மாரி செல்வராஜைப் பார்த்தால் பொறாமையாக இருக்கின்றது எனக் கூறினார்.

திருமாவளவன்: இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், வாழை படத்தத்தைப் பார்த்தபின்னர், சென்னையில் உள்ள, மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று, அவரைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை மாரி செல்வராஜே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படத்தில் நடித்திருந்த சிறுவர்களையும் பாராட்டியுள்ளார். அதேபோல் மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தாயார், படத்தில் நடித்த சிறுவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். மாரி செல்வராஜ்க்கு சில புத்தகங்களைப் பரிசளித்தார்.

பாராட்டு: படம் குறித்தும் படத்தின் மைய்யகருவான உண்மைச் சம்பவம் குறித்தும் நீணட நேரம் பேசிய திருமாவளவன், மாரி செல்வராஜ் வீட்டிலேயே மதிய உணவும் சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது. சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல், அரசியல் தளத்தில் இருப்பவர்களும் வாழை படத்தைப் பார்த்து, மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர் என்பது வாழை படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website