10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி 2 வாரம் வைத்திருந்த வாலிபர்!!
அரூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்புபடித்து வந்த சிறுமி கடந்த 17ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால், சிறுமி பள்ளியிலும் இல்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீட்டில் பெற்றோர்கள் தேடி பார்த்தனர்.
ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து சிறுமியை காணவில்லை என, காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் அதே பகுதியைச் சார்ந்த வல்லரசு என்ற இளைஞர் கடத்தியிருக்கலாம் என, சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து வல்லரசு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அரூர் பகுதியில் உறவினர் வீட்டில் சிறுமியை கடத்திச் சென்று வல்லரசு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் வல்லரசு மற்றும் சிறுமி இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, இளைஞர் வல்லரசு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதும், இரண்டு வாரமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பெற்றோரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து பத்தாம் வகுப்பு சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் வல்லரசுவை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.