35 வயதில் 41 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறவிருக்கும் இளைஞர்… யார் அவர்: தெரிந்துகொள்ள வேண்டிய கதை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவரும் நிலையில், தமது 35 வயதில் ஓய்வை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
35 வயதில் ஓய்வு
கலிபோர்னியா மாகாணத்தில் குடியிருக்கும் Ethan Nguonly என்ற 22 வயது கூகுள் மென்பொருள் பொறியாளரே, 5 மில்லியன் டொலர் சேமிப்புடன், தமது 35 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தமது எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ரியல் எஸ்டேட் சந்தையில் தீவிரமாக ஈடுபட்டும் வருகிறார். ஈதன் ங்குன்லி தனது கல்லூரி பட்டப்படிப்பை முடித்ததும் நிதி சுதந்திரத்திற்கான தனது முயற்சியில் இறங்கியுள்ளார்.
மே 2021ல், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது கணினி அறிவியல் பட்டப்படிப்பை ஈதன் ங்குன்லி முடித்துள்ளார். ஆகஸ்ட் 2022ல் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
ஆனால் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது தமது கனவு என தெரிவித்திருந்த ங்குன்லி டிசம்பர் 2021ல் கூகிள் நிறுவனத்தில் இணைந்து தமது கனவை நிறைவேற்றினார்.
சேமிக்கவும் முதலீடு செய்யவும்
தற்போதைய அவரது ஆண்டு சம்பளம் என்பது சுமார் 1.60 கோடி என்றே கூறப்படுகிறது. மேலும், இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் பெற்றோருடன் தொடர்ந்து வாழ்ந்தார். இது அவர் தனது வருமானத்தில் முடிந்தவரை சேமிக்கவும் முதலீடு செய்யவும் முடிந்தது என்றார்.
அதாவது வர்ஜீனியாவில் தனது பெற்றோர் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள அவரது உறவினர் ஆகியோருடன் தங்கிய அந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60,000 டொலர் அளவுக்கு சேமிக்க முடிந்தது என்று அவர் மதிப்பிடுகிறார்.
2022 தொடக்கத்தில் தமது முதல் குடியிருப்பை ஈதன் ங்குன்லி வாங்கியுள்ளார். ஆனால் அதை வாடகைக்கு விட்டு, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை அதில் இருந்து சம்பாதிக்கிறார்.
நிதி குறித்து மிகுந்த திட்டமிடல் இருந்தும் கிரிப்டோகரன்சி முதலீடுகள் ஊடாக 2021ல் சுமார் 80,000 டொலர் தொகையை இழந்துள்ளார். இதனையடுத்து தமது மொத்த கவனத்தையும் ரியல் எஸ்டேட் சந்தையில் திருப்பியுள்ளார்.
தற்போது தமது 35வது வயதில் 5 மில்லியன் டொலர், தோராயமாக 41 கோடி சேமிப்புடன் ஓய்வு பெறும் முடிவில் உள்ளார்.