தமிழகம்

உஷார்!! ‘படிப்படியாக மழை அதிகரிக்கக் கூடும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Quick Share

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (13.10.2024 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்த வரை இன்று முதல் விட்டு விட்டு மழை தொடங்கி நாளை (14.10.2024) முதல் படிப்படியாக அதிகரிக்கக் கூடும் அதிகரிக்கக்கூடும்.

அதன்படி வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும். எனவே சென்னைக்கு 15ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. 16ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகளில், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

16 மற்றும் 17ஆம் தேதிகளில் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 52 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். வங்கக்கடல் பகுதியைப் பொறுத்தவரையில் இன்று தெற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதே போன்று 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று ஆனது 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

வடகிழக்கு பருவமழை தொடங்குவது பொறுத்த வரையில், தற்பொழுது இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து தென்மேற்கு தென்மேற்கு பருவமழையானது விலகிக் கொண்டிருக்கிறது. அடுத்த வரும் இரு தினங்களில், அதனைத் தொடர்ந்து வருகின்ற இரண்டு தினங்களில் முற்றாக விலகி தென்மேற்கு பருவ மழை விலகி வட கிழக்கு பருவமழை 15, 16 ஆ,ம் தேதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது” எனத் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை: திமுக தலைமை கழகம் முக்கிய அறிவுறுத்தல்!

Quick Share

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (13.10.2024 செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “வடகிழக்கு பருவமழை தொடங்குவது பொறுத்த வரையில், தற்பொழுது இந்தியாவின் மத்திய மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து தென்மேற்கு தென்மேற்கு பருவமழையானது விலகிக் கொண்டிருக்கிறது. அடுத்த வரும் இரு தினங்களில், அதனைத் தொடர்ந்து வருகின்ற இரண்டு தினங்களில் தென்மேற்கு பருவ மழை முற்றாக விலகி வட கிழக்கு பருவமழை 15, 16 ஆம் தேதிகளில் துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள், உள்ளிட்ட திமுக பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலில் அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதோடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளனர். மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் தங்களது குறைந்தபட்சத் தேவைகளைத் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களுக்குத் தேவையான அளவில் அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, காய்கறிகள், குழந்தைகளுக்கான பிஸ்கட், தின்பண்டங்கள் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதோடு, இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் உள்ளனவா என்று கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லாத பொருட்களை மட்டும் அளவாக வாங்கிக் கொள்ளவும்.

குடிநீரைத் தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்வதோடு, தேவையான மருந்து மாத்திரைகளையும் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும். செல்போன்கள், லேப்டாப், பவர் பேங்க் இருப்பின் அவற்றை முழுமையான சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பதற்றப்படவோ – பயப்படவோ தேவையில்லை. தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமுமில்லை. பெரும்பாலான மக்கள் இத்தகைய தயார்நிலையில் இருப்பின், அரசாங்கத்தின் முழுமையான கவனத்தை இத்தகைய தயார் நிலைக்குக் கூட வாய்ப்பில்லாத ஏழை எளிய மக்களின் மீது செலுத்தலாம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்து விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியும்.

மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது. ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்வோம். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன் திமுகவும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என திமுக தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒன்றிய, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும்.

மழைக்காலத்தில் திமுகவினர், அரசு, பொதுமக்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும், தன்னார்வலர்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகள், மழை தொடர்பாக தெரிவிக்கின்ற தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு திமுக நிர்வாகிகள் வழிவகை செய்யலாம். குறிப்பாக, களத்தில் தன்னார்வலர்களுடன் கை கோத்து, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதற்கான தலையாயப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம். குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். மீட்புப்பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதை உறுதிசெய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார்!! நாளை முதல் 4 நாட்கள் ரொம்ப முக்கியம்.. கொட்டப்போகும் கனமழை..தமிழ்நாடு வெதர்மேன்...

Quick Share

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 15 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாததைவிட மிக அதிகளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 15 ஆம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலாரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்த முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வெப்ப சலனம் ஆரம்பித்துள்ளதாகவும், மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என்றும் பின்னர் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது மேகக்கூட்டம் பரந்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக மீண்டும் பாண்டி- சென்னை- நெல்லூர்- காவாலி பெல்ட் இருந்து வருகிறது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்

அக்டோபர் 14 முதல் 17க்குள் கனமழை தொடங்கும் என்றும் மழை தொடங்கும் நேரத்தை சொல்வது சற்று கடினமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த 4 நாட்களில் பாண்டி-சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லூர் பெல்ட்களில் ஒரு நாளாவது மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்தம் வட தமிழகம் அருகே வந்து நின்றுவிட்டால் அல்லது மெதுவாக நகர்ந்தால் 3-4 நாட்களில் கனமழையைப் பெறலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், குறிப்பிட்ட காலப்பகுதியில் வானிலை மையத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி ஒருங்கிணையும் வரை உள்மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என்றும் மதுரை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, தர்மபுரி, திருச்சி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என்றும்
சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் ஆன் அன்ட் ஆஃப் திடீர் மழை இன்று இருக்கும் என்றும் திங்கட்கிழமை முதல் கியர் ஷிப்ட் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதி மக்கள் இன்று துணிகளை துவைத்து போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த நாளை மிஸ் பண்ண வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலம் நாளை முதல் வெயிலை பார்க்க முடியாது என மறைமுகமாக கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய புதுமணத்தம்பதி..கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழ...

Quick Share

கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இருவரும் காரில் ஆலுவாவில் இருந்து திரும்பினர். அவர்கள் பயணித்த கார் கொளஞ்சேரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. 

இதனால் சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக விழுந்துள்ளது. கார்த்திக், விஸ்மயா இருவரும் பயத்தில் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். 

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தம்பதியரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் புதுமணத்தம்பதி இருவரும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.       

மக்களே எச்சரிக்கை!! வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Quick Share

வங்கக்கடலில் வருகிற ஒக்டோபர் 14 -ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், ஒக்டோபர் 14 -ம் திகதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கரூர் திருச்சி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் வருகிற ஒக்டோபர் 14 -ம் திகதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, தற்போது நிலவி வரும் வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.

‘1.5 டன் மீன்கள் பறிமுதல்’ – மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி!

Quick Share

கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் பதிவு செய்யப்படாத சுருக்கு மடி வலைகளைக் கொண்டு படகுகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் யேகேஷ், மீன்வளத்துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி, மீன்வளத்துறை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் காவலர்கள் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குப் பதிவு செய்யப்படாத படகு மூலம் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 1.5 டன் மீன்கள் இருந்தது. 

இதையடுத்து அந்த மீன்களை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அந்த மீன்களை ஏலம் விட்டனர். அதில் மீன்கள் ரூ. 1.5 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த பணத்தை அரசு கணக்கில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவு வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்படாத படகு மூலம் , தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாக 3 படகு உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடல்மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி மீனவர்களிடம் பதிவு செய்யப்படாத படகு மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றனர்.

‘தொடர் விடுமுறை’ – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Quick Share

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/10/2024 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை) அன்று 225 பேருந்துகளும், 10/10/2024 (வியாழக்கிழமை) அன்று 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை) அன்று 35 பேருந்துகளும் 10/10/2024 (வியாழக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே சமயம் மாதவரத்திலிருந்து 09/10/204 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே. பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“14 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாம்சங் நிறுவனம் உறுதி” – அமைச்சர் தகவல்!

Quick Share

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகள் எதிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.

அதே சமயம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக விரைந்து தீர்வு காணத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று (07.10.2024) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு. சங்கத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எந்த முடிவும் எட்டப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அரசின் அறிவுறுத்தலின் படி போராட்டக்குழுவினரின் 14 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாம்சங் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதிலும் குறிப்பாகக் குளிர்சாதன வசதி கொண்ட ஐந்து பேருந்துகளை நிறுவத்தின் சார்பில் இயக்கப்பட்டு வந்தது. இன்று 108 பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். ஆலையில் பணிபுரியும் தொழிலாளர் யாரேனும் இறக்கும் பட்சத்தில் உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இந்த மாதம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் உயர்த்தி தருவதாக என 14 கோரிக்கைகள் நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது.

எனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர், அரசின் கோரிக்கையை ஏற்று நாளை (08.10.2024) முதல் பணிக்குத் திரும்பக் கேட்டுக்கொள்கிறோம். எந்த பிரச்சனை என்றாலும் அரசு தீர்ப்பதற்குத் தயாராக உள்ளது. சாங்சங் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. அதனை இங்கு விவாதிக்க முடியாது” எனத் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா மற்றும் சி.வி. கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் உடன்பாட்டுக்கு வந்து கையெழுத்திட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் போராட்டத்தைத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சேதுபதி மன்னர் கட்டிய கோயிலில் பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

Quick Share

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே பெருவயல், ரெணபலி முருகன் கோயில் சேதுபதி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பெருவயல், முருகன் கோயில் தூணில் ஐந்து வரிகள் கொண்ட பாண்டியர் கால துண்டுக் கல்வெட்டு இருந்ததை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டுபிடித்துப் படித்து ஆய்வு செய்தார்.

இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “இக்கோயில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தில் (கி.பி.1728-1735) அவருடைய பிரதானி வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. கி.பி.1736இல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இங்கு உள்ளது. புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, கோயில் திருச்சுற்று வடமேற்கு மூலையில் உள்ள தூண் போதிகையில் உள்ளது. இதில் “(சந்தி) விக்கிரகப் பேறும் மற்றும் எப்பேர்பட்டின(வும்), ரன்னொம் கைக்கொண்டு திருப்படி மாற்றுள்(ளிட்டு), செம்பிலும் வெட்டிக் கொள்க, இவை மதுரோதய வளநாட்டுக் காஞை (இருக்கை), பெருமணலூர் மந்திரி இராமனான ப(ல்லவராயன்)” என உள்ளது.

கல்வெட்டில் சொல்லப்படும் பெருமணலூர் மந்திரி இராமனான பல்லவராயன் என்பவர், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியாவார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, திருத்தங்கல், ஈஞ்சார் கோயில் கல்வெட்டுகளில் இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமையான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி1216-1244) காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் காலத்தில் இருந்த கோயிலுக்கு தானம் வழங்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சந்தி விக்கிரகப்பேறு என்ற வரியும், மதுரோதய வளநாட்டுக் காஞை இருக்கை என்ற நாட்டுப்பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூணின் மேற்பகுதியை உத்திரத்துடன் இணைக்கும் விரிந்த கை போன்ற அமைப்பைப் போதிகை என்பர். பாண்டியர், நாயக்கர், சேதுபதி மன்னர் காலங்களில் கட்டப்பட்ட கோயில் தூண்களில் வெவ்வேறு வகையான போதிகைகளை அமைத்து அழகுபடுத்துவர். கல்வெட்டு உள்ள வெட்டுப் போதிகை எனும் அமைப்பு பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் கால வெட்டுப் போதிகைகளை சேதுபதி கால கருங்கல் தூண்களுடன் இணைத்து இக்கோயில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. வெட்டுப் போதிகை கற்கள் இவ்வூரில் இருந்து அழிந்து போன ஒரு பாண்டியர் கால சிவன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டவையாக இருக்கலாம்” என்றார்.

ஆச்சரிய தகவல்.. இன்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழும் நபர்.. ஐயப்ப சாமி பக்தர் ..

Quick Share

கர்நாடகாவில் பழைய இன்ஜின் ஆயிலை குடித்து உயிர் வாழும் நபர் குறித்த தகவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார் (40). தாய், தந்தையர் யார் என்ற தெரியாத நிலையில், திருமணமும் ஆகாமல் கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகன இன்ஜின் ஆயிலை ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ்வதாகத் தெரிவிக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கருநிறத்தில் இன்ஜின் ஆயிலை குடித்து வந்த குமாரை பலரும் சூழ்ந்துகொண்டு ஆச்சரியமாக பார்த்தனர்.

இதுகுறித்து குமாரிடம் விசாரித்ததில், கட்டிடத் தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் பசிக்காக இன்ஜின் ஆயில் குடித்ததாகவும், அதனையே பழக்கப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார்.

கடந்த 24 ஆண்டுகளாக இன்ஜின் ஆயில், அவ்வப்போது காகிதங்கள், டீ, காபி ஆகியவற்றை குடிப்பதாகவும், நாளொன்றிற்கு 5 லிட்டர் வரை வாகன பழுது பார்க்கும் நிலையங்களில் பணமின்றி பழைய இன்ஜின் ஆயில்களை வாங்கி குடிப்பதாகவும், இதனால் தனக்கு எவ்வித உடல் உபாதையும் இல்லை என்றார்.

ஐயப்ப பக்தி காரணமாக எப்பொழுதும் கருநிற ஆடைகள் அணிந்துக்கொள்வதாகக் கூறும் இவர், கோயிலுக்கு சென்று திரும்பியபோது ரயில் டிக்கெட் இல்லாமல் ஒசூரில் இறக்கிவிட்டதாகவும், சித்ரதுர்கா செல்ல பணமில்லாமல் பலரிடம் கேட்டு ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உணவாக பழைய இன்ஜின் ஆயிலை குடிக்கும் நபரை பலரும் ஆச்சரியமாகவும், திகிலோடு பார்த்துச் செல்கின்றனர்.


13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Quick Share

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று (28.09.2024) வெளியிடப்பட்ட வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், தமிழகத்தில் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (29.09.2024) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

அதே போன்று தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (30.09.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் சென்னையில் அடுத்த 24 மணி நேரமும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் என்கவுன்டர் சம்பவம்: 67 லட்சம் ரூபாய் பறிமுதல்!

Quick Share

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையில் வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அச்சமயத்தில் கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளை கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளட்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குமாரபாளையத்தில் என்கவுண்டர் நடத்தப்பட்ட இடத்தில் நீல நிறத்தில் கொள்ளையர்கள் தூக்கிக்கொண்டு ஓடிய பேக்கில் இருந்து சிதறிய 500 ரூபாய் நோட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. நோட்டுகள் அந்த இடத்திலேயே அப்படியே கிடக்கிறது. அவை காற்றில் பறக்காமல் இருப்பதற்காக காவல்துறையினர் ரூபாய் நோட்டின் மீது கற்களை வைத்துள்ளனர். 

தடயவியல் நிபுணர்கள் சோதனையில் இறங்கி தடயங்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட கண்டெய்னரில் இருந்து மொத்தமாக 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




You cannot copy content of this Website