நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயிலும் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திடீர் வயிறு வலி ஏற்பட்டுள்ளது. வயிறு வலியின் காரணமாக ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஆவரங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியை சார்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகம் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக குடும்பத்துடன், பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதிக்கு குடி பெயர்ந்தார். இந்நிலையில் தனது 16 வயது மகளை பள்ளிபாளையம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு கல்வி பயில்வதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் சேர்த்தார். இதனையடுத்து சக மாணவிகளுடன் அவர் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மாணவிக்கு லேசாக வயிறு வீங்கியது போல் காணப்பட்டுள்ளது. மாணவிக்கு வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கும் என பெற்றோர் நினைத்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கப் போல் பள்ளிக்குச் சென்று, பள்ளியில் கல்வி பயின்று கொண்டிருந்த மாணவிக்கு நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மாணவியை கைத்தாங்கலாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பிணியாக இருப்பதும் பிரசவ வலி எடுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சில நிமிடங்களில் அவருக்கு அழகிய பெண் குழந்தை 2 கிலோ 800 கிராம் எடையில் பிறந்தது. தொடர்ந்து இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் பதறி அடித்துக் கொண்டு பள்ளி வந்தனர். மேலும் மருத்துவர்கள் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த குழந்தை நல மருத்துவ அதிகாரிகள், அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியின் பெற்றோர் ஆசிரியர் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் 11-ஆம் வகுப்பு கல்வி பயிலும் 16-வயதே நிரம்பிய மாணவி குழந்தை பெற்ற சம்பவம் பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து தாய் சேய் இருவரும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவியை ஆசை வார்த்தை கூறியோ அல்லது மிரட்டியோ யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் எனவும், இதன் காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்.தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் வீட்டில் தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதற்காக மாணவி இதுகுறித்து தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவிக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் அதன் தந்தை யார் என்பது குறித்து மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது அவரது உடல்நிலை மோசமாக இருக்கும் நிலையில் சிறிது கால சிகிச்சைக்கு பிறகு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட இருக்கிறது. மேலும் இது தொடர்பாக பள்ளிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் மாணவி ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசித்த போது அவரது சித்தி மகனான ரங்கராஜ் என்பவர் மாணவியை தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும், அதனால் மாணவி கருவுற்றிருக்கலாம் என மாணவி தெரிவித்துள்ளார் எனவும், அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.