2020-IPL ஏலம்: CSK அணியில் புதிதாக இடம்பிடித்த முக்கிய வீரர்கள் யார் யார் ?
களைகட்ட காத்திருக்கும், IPL 2020- 13 வது போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 8 வெளிநாட்டு வீரர்களையும், 17 இந்திய வீரர்களையும் கொண்டு மொத்தம் 25 வீரர்களை அணியில் கொண்டிருக்கவேண்டும். நாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தல M.S.தோனியை கேப்டனாக கொண்ட, 4 முறை IPL கோப்பையை வென்ற “சென்னை சூப்பர் கிங்ஸ்” அணியில் யார் சேர்வார்கள் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
CSK அணி IPL-ல் செலவழித்த பணம் ரூ.70.40 கோடி, தற்போது கையில் வைத்திருக்கும் தொகை ரூ.14.60 கோடி. இதை வைத்து தான் இன்று ஏலம் தொடங்கியுள்ளது. CSK அணியில் வலிமையான 20 வீரர்களை ஏற்கனவே தக்கவைத்து கொண்டுள்ளது. தற்போது தேவைப்படுவது 3 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் வீதம் மொத்தம் 5 வீரர்கள் தேவை. CSK வலிமையான அணியை கொண்டுள்ளதால் எப்போதும் ஏலம் எடுக்கும் போது பதற்றமில்லாமல் யோசித்து வீரர்களை தேர்தெடுக்கும். இந்த முறையும் அப்படி யோசித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரரும், கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்திய சாம் கரண் எனும் இளம் வீரரை ரூ.5.5 கோடிக்கு ஏலம் எடுத்து தட்டி தூக்கியுள்ளது.
மேலும் சீனியர் ஸ்பின்னரான பியூஸ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. ஆனால் அவரின் அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். ஏற்கனவே, ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர் போன்ற ஸ்பின்னர்கள் அணியில் இருந்தாலும், இவர் அனுபவம் மிக்கவர் என்பதால் அணிக்கு சாதகமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குறைந்த இருப்பு தொகை வைத்திருந்த நிலையில் CSK அணி இவ்வளவு ரூபாய் செலவழித்து பியூஸை வாங்கியதால் ரசிகர்கள் கவலையை பதிவிட்டு வருகின்றனர். அதற்கடுத்து ஆஸ்திரேலிய அணி வீரரான பாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசல்வுட்டை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. தற்போது CSK-விடம் மீதமுள்ள தொகை ரூ.35 லட்சம் மட்டுமே. ஆனால் இன்னும் 2 வீரர்களை அணி தேர்வு செய்ய வேண்டும்.